வாரணாசியில் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
காஞ்சிபுரம் : உ.பி. மாநிலம் வாரணாசியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சி சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சாதுர்மாஸ்ய விரதம், சந்திர மௌலீசுவரர் பூஜையும் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று உ.பி. மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் காசியில் வாரணாசியில் உள்ள சங்கர மடத்துக்கு விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற வந்தார். அவருக்கு வாரணாசி சங்கர மடம் கிளையின் சார்பாக மங்களை இசை வாத்தியங்களுடன் வரவேற்பளிக்கப்பட்டது. ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற யோகி ஆதித்யநாத், சுவாமிகள் வழிபாடு செய்து கொண்டிருந்த சந்திர மௌலீசுவரர் பூஜையிலும், தீப பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் யோகி ஆதித்யநாத்தும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நீண்ட நேரம் தனியாக அமர்ந்து நாட்டில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதித்ததாக காஞ்சி சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.