திருப்பூர் காவல் தெய்வம்.. செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் விழா; பக்தர்கள் பரவசம்
திருப்பூர்; திருப்பூர் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
செல்லாண்டியம்மன் கோயில் ஆடிக் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்ததது. தினமும் கோட்டை முனியப்பன் கோவிலிலிருந்து சூலம் எடுத்து வருதல், டவுன் மாரியம்மன் கோவிலிலிருந்து பூவோடு எடுத்தல், கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் ஆகியன நடந்தது. விழாவையொட்டி மீனாட்சியம்மன் , சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன்பின், அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலுக்கு பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.