உடம்பு முழுவதும் சேறு பூசி வேப்பிலை ஏந்தி பக்தர்கள் வினோத வழிபாடு
கமுதி: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் 23ம் ஆண்டு ஆடிப் பொங்கல் விழா முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து உடம்பு முழுவதும் சேறு பூசி வேப்பிலை கையில் ஏந்தி வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பக்தர்கள் கூறுகையில், சக்தி மாரியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக விரதம் இருந்து சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.இதன்மூலம் உடல் வெப்பம், அம்மை நோய் உட்பட பல்வேறு நோயில் இருந்து காத்துக்கொள்ளப்படுகிறது. உடம்பில் உள்ள நோய்,பிணிகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி ஏற்படும். இதனால் தொடர்ந்து குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன். இதேபோன்று 100க்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர்,என்றார். பெருமாள் கோயிலில் இருந்து முக்கிய விதிகளில் அக்கினி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சக்தி மாரியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கமுதி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.