சம்போ மகாதேவா.. ஆடி கடைசி சோமவாரம், சிவராத்திரி ; சிவனை வழிபட நல்லது நடக்கும்
விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று ஈசனை வழிபட நல்லதே நடக்கும். துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானை மகாதேவன் என்பர். அவரை சம்போ மகாதேவா என்று வாய்விட்டு கூவி அழைப்பதை கேட்டிருப்பீர்கள். சிவபெருமானுக்கு பல நாமங்கள் உண்டு. அதில் சம்பு என்பதும் ஒன்று, சம்பு என்றால் இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் என்பது பொருளாகும். சம்பு என்பது பின்னாளில் சாம்பவன், சாம்பான், சாம்பு எனப் பலவகைகளிலும் திரிந்தது.