அழகர்கோவிலில் கள்ளழகருக்கு 100 டன் நெல் காணிக்கை; பக்தர்கள் நேர்த்திக்கடன்
அழகர்கோவில்,: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் விவசாயிகள் நெல் உள்பட பல தானியங்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இந்தாண்டு நெல் மட்டும் நுாறு டன் வழங்கியுள்ளனர்.
கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா, ஆடிபெருந்திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல், சிறுதானியங்கள், மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றை மூடை மூடையாக காணிக்கைச் செலுத்தி வருகின்றனர். நேர்த்திக் கடனாக வழங்குவோரும் உண்டு.
இது குறித்து துணை ஆணையர் ராமசாமி கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிலங்களில் விவசாயம் செய்வோர் பங்கு நெல்லை வழங்கியதற்கு ஆதாரமாக இங்கு ராம, லட்சுமண என இரு களஞ்சியங்கள் உள்ளன. நெல் சேமிப்புக்காக கட்டப்பட்ட இது 3 ஆயிரம் கலம் கொள்ளவு கொண்டது. ஒரு கலம் என்பது 126 கிலோ. அக்காலத்தில் மக்கள் பசி, பட்டினியால் வாடும் போது அவர்களின் பசிபோக்கும் விதமாக கோயிலில் இருந்து நெல் வழங்கியுள்ளனர். இதுபோல் ஆந்திர மாநிலத்தில வறட்சி, பஞ்சம் ஏற்பட்ட போது, அழகர்மலையில் இருந்து நுாற்றுக் கணக்கான மாட்டு வண்டிகளில் திருப்பதிக்கு நெல் வழங்கியதால், கள்ளழகருக்கு படியளந்த பெருமாள் என்ற பெயரும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளில் காணிக்கையாக வந்த தானியங்களில் நெல் மட்டும் லட்சம் கிலோ (நுாறு டன்) உள்ளது. அதுபோல் சிறுதானியங்கள், மிளகாய், பருத்தி உள்ளிட்ட காணிக்கைகளை தனித்தனியாக வைத்துள்ளோம். இதனை பொது ஏலத்திற்கு விட்டு கிடைக்கும் தொகையை திருப்பணிகளுக்கு பயன்படுத்துகிறோம், என்றார்.