பெருமைமிகு ஹிந்துவாக உணர்கிறேன்; பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
புதுடில்லி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன், புதுடில்லியில் உள்ள சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோவிலில் நேற்று தரிசனம் செய்தார்.
ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன் புதுடில்லி வந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துஉள்ளார். புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த, ஜி - 20 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலையில், சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோவிலுக்கு, ரிஷி சுனக் மனைவியுடன் வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. எனவே, கோவிலின் முகப்பு பகுதியில் இருந்து குடை பிடித்தபடி இருவரும் வெறுங்காலுடன் நடந்து வந்தனர். அவர்களுடன், பிரிட்டனில் உள்ள சுவாமி நாராயன் கோவில் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவில் உறுப்பினர் உள்ளிட்டோர் வந்தனர். கோவிலில் உள்ள சுவாமி நாராயண் தங்க விக்கிரகத்துக்கு ரிஷி சுனக்கும், அவரது மனைவியும் மலர்களால் அர்ச்சனை செய்து, தீப ஆராதனையில் பங்கேற்றனர். பின், சீதா ராமன், ராதாகிருஷ்ணன், லட்சுமி நாராயணன், சிவன் - பார்வதி விக்கிரகங்களை வழிபட்டனர். மொத்தம் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்து சுற்றிப் பார்த்த அவர்கள், கோவிலின் வரலாறு, சிற்பக்கலைகளின் சிறப்புகளை கேட்டறிந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பிரிட்டன் பிரதமருக்கும், அவரது மனைவிக்கும் அக் ஷர்தாம் கோவிலின் மாதிரி வடிவம், சலவைக் கற்களால் செய்யப்பட்ட யானை மற்றும் மயில் சிற்பங்கள் பரிசளிக்கப்பட்டன. அக் ஷதா மூர்த்தி, இன் போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள். இந்தியாவில் இருந்து துவங்கிய என் வேர்கள் குறித்தும், இந்தியாவுடனான என் தொடர்புகள் குறித்தும் பெருமை அடைகிறேன். இந்த தருணத்தில் பெருமைமிகு ஹிந்துவாக உணர்கிறேன். இந்த நாட்டுடனும், இந்திய மக்களுடனும் என் உறவு எப்போதும் தொடரும். ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர்.