சனாதன தர்மத்தை அழித்தால் தான் தீண்டாமை அழியும்; உதயநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு
சென்னை: தமிழகத்தில் தீண்டாமை இருப்பதாக கவர்னர் ரவி கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை அழித்தால் தான் தீண்டாமை அழியும் என பேசியுள்ளது மீண்டும் சர்ச்சை ஆகியுள்ளது.
தமிழக அமைச்சர் உதயநிதி சில நாட்களுக்கு முன்னதாக கொசு, டெங்கு, மலேரியாவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குச் தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நடைபெறுகிறது. பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவை மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை இன்னும் இருக்கிறது. கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகளைக் கலப்பது போன்ற கொடுமைகள் நடக்கிறது. இவ்வாறு பேசியிருந்தார். கவர்னரின் இந்த கருத்து குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி அளித்த பதில்: தீண்டாமையை ஒழிக்கத்தான் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். சனாதனம் அழிந்தால் தீண்டாமையும் அழிந்துவிடும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிலளித்தார். மீண்டும் சனாதனத்தை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.