உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி வந்தா திருப்பம் ; திருப்பதியில் உள்ள ஏழுமலைகள் எவை தெரியுமா?

திருப்பதி வந்தா திருப்பம் ; திருப்பதியில் உள்ள ஏழுமலைகள் எவை தெரியுமா?

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும் என்றால் ஏழுமலைகளை கடந்தாக வேண்டும். இப்படி மலைகளை மையமாக்கி பெருமாள் இருப்பதால் இவருக்கு ‘மலையப்பர்’ , ‘மலை குனிய நின்றான்’ என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த மலைகள் என்னென்ன? அதன் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.

1. விருஷாசலம்/ விருஷாத்ரி: விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார்.

2. விருஷபாசலம்/ விருஷபாத்ரி: விருஷபன் என்னும் அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான்.

3. கருடாசலம்/ கருடாத்ரி: கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார்.

4. அஞ்சனாசலம்/ அஞ்சனாத்ரி:  குழந்தை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர்.

5. நாராயணாசலம்/ நாராயணாத்ரி:  பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது.

6. வேங்கடாசலம்/ வேங்கடாத்ரி:  வேம் + கடம் = வேங்கடம். வேம் – பாவம், கடம் – எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.

7. சேஷாசலம்/சேஷாத்ரி:  மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். அதைப் போலவே இங்கும் ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். அதன் மீது வெங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.
இவரது அழகை காண்போரின் கண்கள் குளிர்ச்சியாகும். வாழ்வு இனிமையாகும். இவர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார்  இங்குள்ள குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகிறார்.

ஊனேறு செல்வத்து உடற்பிறவியான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான் தன்வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

திருமகளை மணம் புரிவதற்காக, வலிமைமிக்க ஏழு எருதுகளை வென்றவர் திருமால். இவருக்கு சேவகம் செய்வதே லட்சியமாகக் கொண்டுள்ளேன். இதனால் உடம்பைப் பெருக்கும் செல்வத்தை கொண்ட மனிதப்பிறவியை நான் விரும்பவில்லை. தனது இடது திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் என்னும் வெண்மையான சங்கினை ஏந்தி பெருமாள் காட்சி தரும் இடம் திருமலை. இங்குள்ள குளத்தில் ஒரு நாரையாகப் பிறப்பதையே வேண்டுகிறேன் என உருகுகிறார்.


இவரோ இப்படி. மற்றொரு மகானான ராமானுஜரோ இந்த மலையில் தனது பாதத்தைக்கூட வைக்க விரும்பவில்லை. ஏன் தெரியுமா. இந்த மலையே ஒரு சாளக்கிராமக் கல். இந்தக் கல் இயற்கையில் கிடைப்பது கஷ்டம். சக்தியும் அதிகம். இப்படி மகத்துவம் நிறைந்த மலையில் கால் வைத்தால், இந்தப் பாவம் நம்மை தொற்றிக் கொள்ளுமோ என பயந்தார். என்னதான் இருந்தாலும் வெங்கடாஜலபதியை பார்க்காமல் இருக்க முடியுமா என்ன. ஒருநாள் முழங்கால்களைப் பதித்து ஊர்ந்து ஊர்ந்தே மலையேறினார். ஒருகட்டத்தில் அவரது முழங்கால் முறிந்தது. இதனால் அந்த இடம் ‘முழங்கால் முறிச்சான்’ எனப்பட்டது. இதை தெலுங்கில் ‘மோக்காலு மிட்டா’ என்பர். கடைசியாக பெருமாளை தரிசித்தார். பிறவிப்பயனையும் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !