உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 18 ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 24ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்ட விழாவையொட்டி, கோலாட்டம், தேவராட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேரோட்டத்தையொட்டி, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்ட விழாவில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வரும் அக்., 6ல் முத்து பல்லாக்கு, 8ல் ஆளும் பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !