உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் திருக்கல்யாணம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு

துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் திருக்கல்யாணம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை; விளநகர், துறைகாட்டும் வள்ளலார் கோயிலில்  திருக்கல்யாணம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் விளநகர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வேயுறு தோளியம்மை சமேத  துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது. இங்கு முன் காலத்தில் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் "விழர் நகர் எனப்பட்டது. இது காலப்போக்கில் "விளநகர் ஆனது. திருஞானசம்பந்தர் கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில் காவிரியாறு கரைபுரண்டு ஓடியது. அப்போது வழிதெரியாமல் திண்டாடிய சம்பந்தர். “இங்கு துறைகாட்டுவோர் யாரேனும் உளரோ" என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி துறைகாட்டி, அக்கரை சேர உதவி செய்தார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இவ்வாலயத்தில் 2020ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்  3ம் ஆண்டு சம்வத்ராபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டு காப்பு கட்டி மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !