சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூர தேரோட்டம்; கொட்டும் மழையில் வடம் பிடித்த பக்தர்கள்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. சிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளி, மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது. கடும் மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.