கார்த்திகையில் அய்யப்பனுக்கு 108 வகை அபிஷேகம்; காஞ்சியில் பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம்: கார்த்திகை மாதம் சுவாமி அய்யப்பனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில், அய்யப்பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கார்த்திகை முதல் தேதியான நேற்று, காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்களில் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயிலில் உள்ள பூரண புஷ்கலை சமே த தர்மசாஸ்தா சன்னிதியில், பாண்டுரங்க குருசாமி தலைமையில் திரளான அய்யப்பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம் தெரு, வரசித்தி விநாயகர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் அரசுகாத்தம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு, 108 வகையான அபிஷேக பொருட்கள் வாயிலாக, தொடர்ந்து மூன்றரை மணி நேரம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.