உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. கதாயுதம் ஏந்திய சாஸ்தா

தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. கதாயுதம் ஏந்திய சாஸ்தா

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ கோயில் உள்ளது. இங்கு கதாயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறார். முன்னொரு காலத்தில் சுசீந்திரம் ஞானாரண்யம் என்ற பெயரில் காடாக இருந்தது. இந்த காட்டில் அத்திரி மகரிஷி தன் மனைவி அனுசூயாவுடன் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். இதனால் இத்தலம் ஆஸ்ரமம் என அழைக்கப்பட்டு, ‘ஆஸ்ராமம்’ என மருவியது.

இங்கு சாஸ்தா பீடத்தில் அமர்ந்து வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணுாலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இவருக்கு ஏன் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என பெயர் வந்தது தெரியுமா... பல ஆண்டுக்கு முன் கண் தெரியாத அந்தணர் ஒருவர் சாஸ்தாவை வழிபட்டார். ஒருநாள் தாமதமானதால் இரவில் தங்கினார்.  அப்போது அவரது கண்களில் யாரோ மை தீட்டுவது போல் தெரிந்ததும் திடுக்கிட்டு விழித்தார். உடனே பார்வை வந்து விட்டது. மகிழ்ச்சியில் அவர் ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என கத்தினார். (அஞ்சனம் – மை, எழுதிய – தீட்டிய) நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதியது கண்டன் சாஸ்தா என மாறிவிட்டது. அன்று முதல் ‘கண்ணில் மை தீட்டிய கடவுள்’ என இவரை வழிபடுகின்றனர். இவரை வழிபட்டால் கண் பார்வை சரியாகும்.

எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 4 கி.மீ.,
நேரம்: காலை 7:30 – 8:30 மணி, மாலை 5:00 – 6:00 மணி
தொடர்புக்கு: 99942 49448, 94434 94473


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !