சபரிமலை களபாபிஷேக கட்டண குளறுபடி; அறிக்கை கேட்டது கேரள உயர் நீதிமன்றம்
சபரிமலை: சபரிமலையில் களபாபிஷேகத்துக்கு கட்டணம் வசூலித்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சன்னிதானம் போலீஸ் எஸ்.பி.க்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் முக்கிய வழிபாடுகளில் ஒன்று களபாபிஷேகம். மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக அரைத்த சந்தனம் தங்க குடத்தில் அடைக்கப்பட்டு பூஜித்து அது ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கு தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம் 38 ஆயிரத்து 400 ரூபாய். சந்தனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தேவசம்போர்டு வழங்கும். ஆனால் பக்தர் சந்தனம் கொண்டு வந்தால் தேவசம்போர்டு 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி களபாபிசேகம் நடத்திய பக்தர் சந்தனம் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். எனினும் அவரிடமிருந்து முழு தொகையான 38 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களின் வந்த செய்தியின் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேவசம்போர்டு அளித்த விளக்கத்தில் பொதுவாக சந்தனம் வெளியிலிருந்து கொண்டு வர அனுமதிப்பதில்லை என்றும் ஒரு விசேஷ சூழ்நிலையில் அந்த பக்தரின் சந்தனம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள்அணில் கே நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி சன்னிதானம் போலீஸ் எஸ். பி க்கு உத்தரவிட்டனர்.