சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் சர்ச்சை; பக்தர்கள் கோஷம் எழுப்பியதால் திடீர் பரபரப்பு
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏற அனுமதி வழங்க ஒரு சில பக்தர்கள் கோஷம் எழுப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கனகசபை கதவை திறக்க வற்புறுத்தி இருந்தால் திடீர் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நாளை தேரோட்ட விழா நடைபெற உள்ளதால், மூலவரான நடராஜ பெருமான் கருவறையில் இருந்து வெளியேறி உற்சவரராக செல்வார். இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை கனக சபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலையில், கனகசபையின் கதவு மூடப்பட்டிருந்தது.இந்நிலை நேற்று பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் திடீரென கனக சபை அருகில் நின்று கனக சபை கதவை திறக்க கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, கனகசபை கதவு மூடி இருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், பக்தர்களை அனுமதிக்கும்படியும், கடலூர் மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில், சிதம்பரம் திருக்கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்கபெருமாள், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் கோவிலின் பொது தீட்சிதர்களிடம் அரசாணையின்படி பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தி பேசினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள் அறநிலையத்துறையினர், தீட்சீதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதன்பின், வழக்கு நிலுவையில் உள்ளதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர். அதனை ஏற்காத, அறநிலையத்துறையினர், பக்தர்களை வழக்கம் போல் கனகசலையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு, திரும்பிச் சென்றனர். இதனால் மீண்டும் நடராஜர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, மீண்டும் மாலையில் பக்தர்கள் ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியேறினர்.