உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்காக தஞ்சாவூரில் இருந்து 8 திருக்குடை புறப்பட்டது

அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்காக தஞ்சாவூரில் இருந்து 8 திருக்குடை புறப்பட்டது

தஞ்சாவூர்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, அகில பாரத இந்து மகா சபா சார்பில் திருக்குடை தஞ்சாவூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து  பலவகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அகில பாரத இந்து மகா சபா சார்பில், அலங்காரம் மிக்க பிரம்மாண்டமாக எட்டு திருக்குடைகள் தயார் செய்யப்பட்டது. இந்த திருக்குடைகள் ஊர்வலமாக புறப்பட்டு வரும் ஜன.19ம் தேதி அயோத்தி செல்கிறது. இந்த திருக்குடை ஊர்வலமானது நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமககுளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராமசாமி கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் செந்தில் முருகன் துவக்கி வைத்தார்.  அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் ரமேஷ் பாபு, சிவசேனா கட்சி மாநில தலைவர் மணி பாரதி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் கலந்துக்கொண்டனர்.  இந்த திருக்குடையானது இன்று தஞ்சாவூருக்கு வந்தது. அங்கு பா.ஜ.,சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கரந்தை  ராமர் கோவிலில் எட்டு திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  ஊர்வலத்தை பா.ஜ., மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் துவக்கி வைத்தார். ஊர்வலமாக மேலவீதி மூலை அனுமார் கோவில் வரை சென்றது.  அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் செந்தில் முருகன் கூறியதாவது;  திருக்குடை ஊர்வலமானது, திருச்சி ஸ்ரீரங்கம், கரூர், திருவள்ளூர் வழியாக சென்னை என தமிழகம் முழுவதும் செல்லுகிறது. வரும். ஜன.19ம் தேதி எட்டு திருக்குடைகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைக்கபட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !