100 ஆண்டுக்கு பிறகு.. கெளதமேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தென்னக கும்பமேளா, என அழைக்கப்படும் மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடபடுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசிமகம் விழா நடைபெறுகிறது. இதையொட்டி மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்களிலும் கொடியேற்றப்பட்டு, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், மகாமகம் தொடர்புடைய, கௌதமேஸ்வரர் கோவில் தேர் கடந்த நுாறு ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தால், சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது. இதையடுத்து, கௌதமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் அமைக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தேர் கட்டுமான பணி துவங்கி கடந்த வாரம் நிறைவடைந்து. மூன்று நிலைகளுடன், 21 டன் எடையில், 11.5 உயரத்திற்கு கலைநயமிக்க சிற்பங்களுடன் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாசிமகத்தையொட்டி வரும் 23ம் தேதி சுமார் நுாறு ஆண்டுகளுக்குப் பிறகு கௌதமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே, இரண்டு கால யாக சாலை பூஜைகளுடன், கடம் புறப்பாடாகி ரத பிரதிஷ்டை செய்யப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடந்தது. இந்த புதிய தேரானது மகாமக குளத்தை சுற்றி வலம் வந்தது. நுாறு ஆண்டுகளுக்குப் பிறகு கௌதமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தால், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.