உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் மலர் துாவி வழிபாடு

பேட்டராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் மலர் துாவி வழிபாடு

தேன்கனிக்கோட்டை; தேன்கனிக்கோட்டையில் நடந்த பேட்டராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், கோபுரங்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவல்லி தாயார் சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, பேட்டராய சுவாமி மூலவர் சன்னதி, தாயார் சன்னதி கோபுரங்கள், ராஜகோபுரம், பரமபத வாசல் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்கியது. கடந்த, 17 ல் கும்பாபிஷேக விழா துவங்கி, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோவில் கோபுரங்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடந்தது. திருவண்ணாமலை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் ஜோதிலட்சுமி உட்பட, 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !