சிவன் கோயிலில் கருடன்!
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, நடராஜரின் பஞ்ச சபைகளில் ரத்தினசபையாக விளங்குகிறது. இங்குள்ள திருக்குளம் செங்கசிய உன்மத்த மோட்ச புஷ்கரணி எனப்படுகிறது. இதை தேவாரத்தில் சென்றாடு தீர்த்தம் என்று நாவுக்கரசர் குறிப்பிடுகிறார். கிராதன் என்னும் வேடன், முதுமையில் நடை தளர்ந்து இக்குளக் கரையில் விழுந்தான். அந்த வழியே வந்த ஆந்தை ஒன்று தாகம் தீர்க்க நீரை அருந்தியது. பிறகு கிராதனுக்கு நேராக வந்து நின்று தன் சிறகை அசைத்தது. அதன் இறகில் இருந்து நீர்த்துளிகள் அவன் மீது பட்டது. இறக்கும் தருவாயில் இத்தீர்த்தம் அவன் மீது பட்ட புண்ணியத்தின் காரணமாக சிவபெருமான் அவனுக்கு காட்சி தந்தார். பெருமானே! கொலைத்தொழில் புரிந்ததற்கு பிராயச்சித்தமாக கருடனாகப் பிறந்து இந்தக் கோயிலில் வசிக்கிறேன். இத்தலத்தில் நீங்கள் வீதியுலா வந்து கோயிலுக்குள் செல்லும் போது, நான் உம்மை வலம் வந்து வணங்க வேண்டும், என்று வரம் கேட்டான். சிவ பெருமானும் அருளினார். ஆருத்ராதரிசனம், பங்குனி உத்திர நாட்களில், நடராஜர் வீதியுலா வந்து கோயிலுக்குள் நுழையும்போது கருடன் மூன்றுமுறை வட்ட மடித்து வழிபாடு செய்வதைக் காணலாம்.