மின்விளக்கில் ஜொலிக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரங்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில், 7ம் நாளில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், 24ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையிலும், ஏகன் அனேகன் என்ற தத்துவத்தை விளக்கி, 5 மடக்கில் பரணி தீபமும், மாலை, அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கி, 2,668 அடி உயர முள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரம் களை கட்டியுள்ளது. இதனால், ஒன்பது கோபுரங்களும் மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், 25 ஏக்கரில் உள்ளது.
இதில், ஒன்பது கோபுரங்கள், 63 சன்னிதிகள் உள்ளன. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னிதிகள், மற்றும் ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.
ஸ்தல விருட்சமான மகிழ மரம், சுவாமி அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாணமண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின் விளக்கு 25 கி.மீ., துாரம் வரை தெரியும்.