மாமியாராகப் போறீங்களா?
சவுந்தர்ய லஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம், என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசீர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம் தான். ஆசீர்வாதம் பண்ணுகிறேன். ஆனால், இதையெல்லாம் விட, அதிகமாக அம்பாளுடைய பிரீதியை(அன்பை) சம்பாதித்து கொள்ள வேண்டும் என்றால் பெண்கள் வரதட்சணை, சீர்செனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் எளிமையான கல்யாணங்களுக்கு சம்மதித்தால் தான் முடியும்! பெண்கள் வயசு வந்ததும் கலியாணமாகாமல் நிற்பது, அதனால் மனோ விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப்போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு பெண்கள் மனசு இரங்கினால், அம்பாளுக்கும் மனசு தானாக இரங்கும். நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று வந்ததால் வாங்கிக் கொண்டோம், என்று சொல்வது கூடத் தப்பு. அதனால், அவர்களாகவே கொடுத்தாலும் கூட வேண்டாம் என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும். பெண் வீட்டாருக்கு மிதமிஞ்சிப் பணம் இருந்தால் கூட, எங்களுக்கு பணம் தராதீர்கள். உங்கள் பெண்ணுக்கே ஸ்ரீதனமாகப் போட்டுவையுங்கள், என்று தான் சொல்ல வேண்டும். -பெரியவர்.