நெல்லை முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு
திருநெல்வேலி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்மநட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடைதிறக்கப்பட்டு மூலவர், உற்சவருக்கு சிறப்பு ஹோமம், கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மூலவருக்கு தங்கஅங்கி சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல் நெல்லைஜங்ஷன் பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயிலில் நேற்று ஹோமம், மூலவர், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆறுமுக நயினார் சன்னதியில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், சிவன் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, பாளைமேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, தச்சநல்லுார் நெல்லையப்பர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில், ஜங்ஷன் கைலாசநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி உட்பட பல்வேறு கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு நேற்று காலை நடந்தது.