சித்தம்பலம் காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா
பல்லடம்; சித்தம்பலம் காமாட்சி அம்மன் கோவிலில், பூச்சாட்டு பொங்கல் விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் கொண்டாடப்பட்டது.
பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில், ஏழாம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தன. முன்னதாக, மே 14 அன்று பூச்சாட்டுதல் நிகழ்வுடன் விழா துவங்கியது. இரவு, 7.00 மணிக்கு அன்னபூரணி அலங்காரத்தில் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகள் ஆகியவையும், இதையடுத்து, விசாலாட்சி அம்மன், அங்காள பரமேஸ்வரி, பத்ரகாளி, மகா மாரியம்மன், ஸ்ரீராஜேஸ்வரி என, தினசரி ஒவ்வொரு அலங்காரங்களில் அம்மன் அருள் பாலித்தார். மே 21 அன்று, அம்மன் அழைத்தல், மாப்பிள்ளை அழைப்பு, தீர்த்த கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடந்தன. மறுநாள், திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து கல்யாண விருந்து நடந்தது. மே 22 அன்று மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை தொடர்ந்து, ஸ்ரீகாமாட்சி அம்மன் அலங்காரம் நடந்தது. இரவு, ப. வடுகப்பாளையம் சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும், இதையடுத்து, அழகு குத்தி தேர் இழுத்து வரப்பட்டது. நேற்று காலை, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா மற்றும் வசந்த விழா ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.