நாயை விரட்டிய நல்லவர்!
ADDED :5114 days ago
ஏகநாதர் என்னும் ஞானிக்கு பக்தர் ஒருவர் ரொட்டியும் வெண்ணெயும் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினார். அப்போது, அவ்வழியே சென்ற நாய் அதைபார்த்ததும் அருகில் வந்தது. ஏகநாதரிடம் இருந்த ரொட்டியைக் கவ்விக் கொண்டு ஓடத் தொடங்கியது. நாயின் பின், ஏகநாதரும் பின் தொடர்ந்தார். இதனைக் கண்டு அனைவரும், பாவம், சாமியராக இருந்து கொண்டு வாயில்லா ஜீவனை விரட்டுகிறாரே இவர்! என்று கேலியும் கண்டனமும் செய்தனர். ஆனால், யாருடைய பேச்சையும் அவர் பொருட்படுத்தவில்லை. நாயை மடக்கிப் பிடித்து ரொட்டியை வாயிலிருந்து பறித்தார். அன்பு நாயே! வெறும் ரொட்டியை எப்படி சாப்பிட முடியும்? வெண்ணையைத் தடவிச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும், என்று சொல்லி வெண்ணெயோடு சேர்த்துக் கொடுத்தார். தன்னுயிர் போல பிற உயிர்களையும் நேசித்த ஏகநாதரின் அன்பு உள்ளத்தைக் கண்ட அனைவரும் வியந்தனர்.