ஆடி செவ்வாய்; அகத்தீஸ்வரர் கோவிலில் புற்றுக்கு பாலூற்றி பெண்கள் வழிபாடு
ADDED :492 days ago
சென்னை: வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தின் செவ்வாய்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அந்நாளில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். இன்று ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு, அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள் உற்சவர் கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண் பக்தர்கள், காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின், கோவில் வளாக நாகாத்தம்மன் ஆலயத்தில் உள்ள புற்றுக்கும் பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.