பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய அழகர்கோவில் கள்ளழகர் கோயில்
ADDED :534 days ago
அழகர்கோவில்; ஆடி அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது.
இதையொட்டி பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சன்னதி கதவுகளுக்கு சந்தனம் சாத்தப்பட்டு, பூமாலை அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள், சந்தன குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் சன்னதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று நுாபுர கங்கையில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.