ஆடி வெள்ளி; கூடலூர் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
கூடலூர்; கூடலூரில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாரியம்மன் பழங்களால் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி, அம்மனை தரிசனம் செய்தனர். விளக்கு பூஜை நடந்தது. கூடலூர் 2-வது மைல், அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு, கஞ்சி கலயம் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் 2-வது மயில் ஜங்ஷன் வரை சென்று கோவிலில் நிறைவு பெற்றது. பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. வீடுகளிலும் அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.