பெருமுளை சோமேஸ்வரர் கோவில் சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள 300ஆண்டுகள் பழமையான சோமேஸ்வரர் கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் சிவகாமசுந்தரி உடனுறை சோமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவில் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சிவலிங்கம் உள்ள கட்டடம் மட்டுமே உள்ளது. அதில் சிவன், பார்வதி, பெருமாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், சூரியன், ராகு, கேது, இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி உட்பட பல்வேறு பழமையான அபூர்வமான சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முயற்சித்த நிலையில், பல்வேறு தடைகள் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான சொத்துகள் இருந்தும், அவை தனியார் பலரின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. பொதுமக்களின் முயற்சியில் சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 300ஆண்டுகள் பழமையான இந்தக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.