கேட்டதைத் தரும் கற்பக விருட்சம் ராகவேந்திரர்..!
கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம் தாண்டி நாம் கலியுகத்தில் இருக்கிறோம். இந்த அவசர யுகத்தில் இறைவன் நம்மை தவமியற்றச் சொல்லவில்லை; யக்ஞம் செய்யப் பணிக்கவில்லை, வெறும் நாம ஸ்மரணம் செய்தாலே போதும்; ஜென்மம் கடைத்தேறும் என்பது திருவாக்கு. அது ஒரு தூய தவம் -அதுவே ஒரு பரிசுத்தமான வேள்வி என்பதை தத்தமது வாழ்வில் நிரூபித்த மகான்களின் வரலாறு நமக்கு போதிக்கின்றன. அத்தகு மகான்களின் வரிசையில், இக்கலியுகத்திலும் இன்றும் ஜீவனுடன் -கல்லுக்குள் கருணையுடன் கண்மூடி அமர்ந்துகொண்டு நியாயமான வேண்டுதல்களுடன் வரும் அன்பர்களின் குறைகளை நீக்கி அருள்புரியும் பூஜ்யாய ராகவேந்திரர் முக்கியமானவர். அவர் செய்த அற்புதங்கள் ஏராளம்..!
சோழ நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தஞ்சையை அரசாண்ட மன்னன் விஜயராகவ நாயக்கர் எத்தனையோ பணம் செலவழித்தும் மக்களின் பஞ்சம் தீரவில்லை. ராகவேந்திரரை, கும்பகோணம் வந்து தஞ்சையின் நிலவரம் சொல்லி அரசர் அழைத்தார். சுவாமியும் மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டு பல பூஜைகள், யாகங்கள் செய்து பிரார்த்தித்தார். வருண பகவான் மனம் மகிழ்ந்து மழை பொழிந்து நாடு செழிக்கச் செய்து பஞ்சம் தீர அருளினான். அரசர் மிகவும் மகிழ்ந்து ஒரு வைர மாலையை மடத்திற்கு அன்பளிப்பாகத் தந்தார். அதை ராகவேந்திரர் எரிந்து கொண்டிருந்த அக்னிக்குள் போட்டு விட்டார். அரசருக்குக் கோபம் வந்து குமுறினார். உடனே மகான் ராகவேந்திரர் அக்னி தேவனை மனதால் துதிக்க, வைரமாலை அப்படியே வெளியே வந்தது. அரசன் மகானின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
ஏன் அப்படி செய்தார் என்று சிஷ்யர்கள் கேட்டபோது மகான் சொன்னார், அக்னி தேவன் அந்த மாலையை அணிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதான் அப்படிச் செய்தேன் என்றாராம். அவரது அற்புதங்கள் இன்றும் தொடர்கிறது. கலியுக தெய்வம் மகான் ராகவேந்திரர். மந்திராலய மகான் கேட்டதைத் தரும் கற்பக விருட்சம் போன்றவர். அவர் அட்சதை துர்சக்திகளை விரட்டி உள்ளது. ஜாதி மத பேதம் பார்த்த பக்தரின் அட்சதையை கருப்பாக்கி அனைவரும் இறைவன் முன் சமம் என்பதை உணர்த்தியவர். அவர் மாஞ்சாலை கிராமத்தை தன் பிருந்தாவன இடம் என்று முடிவு செய்து அதைப் பெற நவாபை நாடிய போது அவர் மகானின் பெருமையை உணராமல் மூடிய தட்டில் மாமிசம் தர... அது ராகவேந்திரரின் மகிமையால் ரோஜாப் பூவாக மாறியது. பிறகு நவாப் மன்னிப்பு கேட்டு அவர் விரும்பிய இடம் முழுவதையும் தந்தார்.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த மாஞ்சாலி கிராமமே இன்று மந்திராலயமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் மகான் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் அந்த பிருந்தாவனத்தில் சூட்சுமமாய்த் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்வேன் என்ற சுவாமிகள் இன்றும் தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்.