தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தர்மபுரி; அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில், ராஜ அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று தேய்ப்பிறை அஷ்டமியையொட்டி, அதிகாலை முதல் சுவாமிக்கு, 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு, 1,008 ஆகம பூஜை, வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்கார சேவை, மஹா தீபாராதனையை தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள், சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து நேற்றிரவு, கோவில் வளாகத்தில், 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு, சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.