உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவாலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; திருவாலியில் இன்று காலை நடைபெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா  திருவாலி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான அமிர்தகடவல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச நரசிம்மர் தளங்களில் ஒன்றான இக்கோவிலில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். லஷ்மி தேவியை நரசிம்ம பெருமாள் மடியில் அமர்த்தியபடி சாந்த சுரூபமாக காட்சியளிப்பதால் இங்கு வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கி செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. புகழ் பெற்ற இந்த  கோயிலின் கும்பாபிஷேகம் முரளிதர  ஸ்வாமிகள் முன்னெடுப்பில் இன்று நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 19ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன  இன்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து விமானத்தை அடைந்தன. இதனை அடுத்து ரோகிணி நட்சத்திரம் பஞ்சமி திதி விருச்சிக லக்னத்தில் காலை 9:15 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத கோவில் அர்ச்சகர் சிவராம பட்டாச்சார் தலைமையிலானோர் விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து  தாயாருடன் பெருமாள் கோவில் உள் பிரகார வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !