பரமக்குடி அழகருக்கு நூபுர கங்கை தீர்த்தம் அபிஷேகம்; தைலக்காப்பு விழா கோலாகலம்
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் உற்சவர் அழகருக்கு, மதுரை நூபுர கங்கை தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, தைலக்காப்பு விழாவில் அபிஷேகம் நடத்தப்பட்டது.
மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இதன்படி தைலக்காப்பு விழா துவங்கிய நிலையில், நேற்று இரவு பெருமாள் கொண்டையில் சந்தனாதி திரவியங்களால் சிகையில் தேய்த்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் மதுரை அழகர் கோயில் கோபுர கங்கை நீர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பெருமாளின் அபிஷேக தீர்த்தம் வழங்கப்பட்டது. அப்போது அழகர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனைகள் நடந்தது. நாளை கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.