சபரிமலையில் திருவாபரண பவனி ஆயத்தம் தொடக்கம்; அதிகரிக்கும் பக்தர் கூட்டம்
நாகர்கோவில்; திருவாபரண பவனிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பந்தளத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. இங்கு திருவாபுரணத்தை கும்பிடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஜன.,14 -ல் சபரிமலையில் மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி ஜன.,12 -ல் புறப்படுகிறது. இந்த பவனியின் முன்னால் பந்தளம் மன்னர் பிரதிநிதி பல்லக்கில் தூக்கிச் செல்லப்படுவார். இதற்காக பல்லக்கு புதுப்பிக்கும்பணி பந்தளத்தில் தொடங்கியுள்ளது. பல்லக்கில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. ஜனவரி 12 மதியம் ஒரு மணிக்கு இங்கிருந்து திருவாபுரண பவனி புறப்படும். இதற்கிடையில் பந்தளம் சிராம்பிக்கல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை வணங்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி தரிசனத்திற்காக திருவாபரண பேடகங்கள் திறந்து வைக்கப்பட்டது. ஜனவரி 11 வரை இந்த அரண்மனையில் பக்தர்கள் தரிசிக்கலாம். 12 அதிகாலை 5:30 முதல் பகல் 12:00 வரை பந்தளம் சாஸ்தா கோயில் வாசலில் திருவாபரணங்களை தரிசிக்க முடியும். ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து கொடுக்கப்படுகிறது. மண்டல மகர விளக்கு காலத்திலும், பங்குனி மாதம் உத்திரம் நாளிலும், சித்திரை விஷுவுக்கும் திருவாபரணங்களை கும்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.