திருச்செந்தூர் கடலை காண வந்த பழனி முருகன்..! அபூர்வ காட்சி; பக்தர்கள் சிலிர்ப்பு
திருச்செந்தூர்; முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் கடல் உள்வாங்குவதன் காரணமாகவும் கடலுக்குள் இருக்கும் சிலைகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கோவில் பின்புறம் திடீரென அதிகாலை நேரத்தில் ஒரு சிலை தென்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது அது முருகனின் சிலை. அந்த முருகன் சிலை பழனி ஆண்டி கோலத்தில் சிலை இருந்தது. ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் பைரவர் சிலை, விநாயகர் சிலை, முருகர் சிலை என பல சிலைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பழனி முருகனே திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளியுள்ளார் என்று பக்தர்கள் மெய்சிலிர்த்து அவரை வணங்கி வருகின்றனர். தொடர்ந்து கடற்கரையில் கிடைக்கும் இதுபோல் பொக்கிஷமான சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.