உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டைப் பிள்ளையார் கோவில்களில் கும்பாபிஷேகம்

ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டைப் பிள்ளையார் கோவில்களில் கும்பாபிஷேகம்

ஊட்டி; ஊட்டி லோயர் பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில்களில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.


இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஊட்டி லோயர் பஜாரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுடன் இணைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை, 7:00 மணி முதல் 7:25 மணிக்குள் மகர லக்கனத்தில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் அனைத்து பரிவாரம் மூலமூர்த்திகளுக்கு, மக அபிஷேக அலங்காரம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:35 மணிக்கு,வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சுவாமியின் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


இரட்டை பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; இதே போல, இரட்டைப் பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சியாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 8:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, பேரீதாடனம், புஷ்பாண்ட பூஜை, மகாகணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவக்கோள் யாகம், மக தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணி முதல், விநாயகர் வழிபாடுடன், ரக்ஷா பந்தனன், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதற்கால யாகவேள்வி, மூல மந்திர யாகம், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, நேற்று காலை, 9:20 மணிக்கு, கடங்கள் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியை அடுத்து, 9:30 மணிக்கு, கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !