ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா தினம்: சிறப்பு வழிபாடு
திருப்பூர்; பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா தினம் முன்னிட்டு, திருப்பூர் சத்ய சாய் மந்திரில் சிறப்பு வழிபாடு நடந்தது. பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா நினைவு நாள் மே மாதம் 6ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சத்ய சாய் பக்தர்கள் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், பி.என். ரோடு சத்ய சாய் மந்திரில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று மாலை, வேத பாராயணம் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடந்தது. அதையடுத்து பால விகாஸ் மாணவர்கள் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நடந்தது. இதில் 21 பால விகாஸ் மையங்களின் 21 குருமார்களும், 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மங்கள ஆரத்தி நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சாய் பக்தர்கள், மைய ஒருங்கிணைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா அமைப்பின் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.