எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொல்லவம்பாளையம், எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று (28ம் தேதி) நடந்தது. கிணத்துக்கடவு, சொல்லவம்பாளையம், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள், 26ம் தேதி, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, காப்பு அணிவித்தல், மண்ணெடுத்தல், முளையிடுதல், முலைப்பாளிகை எடுத்து வருதல், முதற்கால வேள்வி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. 27ம் தேதி, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தது. தொடர்ந்து விமான கலசங்கள் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் போன்றவைகள் நடந்தது. இன்று 28ம் தேதி, காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, கலசங்கள் புறப்பாடு, திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், சொலவம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மற்றும் பெருந்திருமஞ்சனம், கோ பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.