பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம்
ADDED :212 days ago
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் –- அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 31ம் தேதி, வைகாசி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் புன்யகோடி விமானத்திலும், இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் உற்சவர் பிரகலாதவரதர், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 5:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின், நான்கு மாட வீதிகளில் வாணவேடிக்கையுடன் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிங்கபெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.