திருப்பதியில் ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் நிறைவு; யாகத்தில் தோன்றிய சிவனின் சூலம்!
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி மகாயாகம் நிறைவடைந்தது.
திருப்பதியில் பக்தர்களின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வேண்டி திருமலை, தர்மகிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத விஞ்ஞான பீடத்தில் சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி மகாயாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பிரமாண்டமாகத் தொடங்கியது. விழாவில் ஆச்சார்ய வாரணம், மேதினி பூஜை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் மற்றும் வேதாரம்பம் போன்ற பாரம்பரிய வேத சடங்குகள் நடைபெற்று வந்தது. இந்த மகாயாகத்தில் 32 வேத அறிஞர்கள் பங்கேற்று, வேத பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம் என பல்வேறு வேத சடங்குகள் செய்து வந்தனர். விழாவின் நிறைவு நாளான இன்று பூர்ணாஹுதியுடன் மகாயாகம் நிறைவடைந்தது. விழாவில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி சி வெங்கையா சவுத்ரி மற்றும் கேஎஸ்எஸ் அவதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
யாகத்தில் தோன்றிய சிவனின் சூலம்: நான்கு நாட்களாக நடைபெற்ற வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி மகாயாகம் நிறைவு நாள் யாகத்தில் பல்வேறு பொருள்கள் சமர்பிக்கப்பட்டு வந்தது. அப்போது யாக குண்டத்தில் தோன்றிய நெருப்பு, சிவனின் சூலம் போல் இருந்தது. இதை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பிரதேஷ தினமான இன்று திருப்பதி ஏழுமலையானுடன் சிவ தரிசனமும் கிடைத்ததாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.