கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில்
பல்லடம்; பல்லடத்தில், பழம்பெருமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழாவுக்கு தயாராகி வருகிறது.பல்லடம், பட்டேல் வீதியில் அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், ஏரத்தாழ, 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் வரலாறு கூட யாரிடமும் இல்லை. அந்த அளவுக்கு பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கோவில் பழமையுடன் காணப்பட்ட நிலையில், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழில் துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன், கோவில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த, 2023ம் ஆண்டு பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு திருப்பணி துவங்கியது. கடந்த ஓராண்டுக்கு மேலாக கோவில் திருப்பணி துவங்கி நடந்து வரும் நிலையில், கோவில் கருவறை, முன் மண்டபம், கோபுரம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், பொலிவிழந்து காணப்பட்ட அருளானந்த ஈஸ்வரர் கோவில், பக்தர்களின் பெரும் முயற்சியால், புதுப்பொலிவு பெற்று, விரைவில், கும்பாபிஷேக விழா காண கோவில் தயாராகி வருகிறது.