சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடைகள் ஊர்வலம்
சென்னை; திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தில் கருடசேவையின்போது ஏழுமலையானுக்கு 11 திருக்குடைகளை, தமிழக பக்தர்கள் சார்பில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் கடந்த 20 ஆண்டுகளாக சமர்ப்பித்து வருகிறது. 21ம் ஆண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி வரவேற்றார். உடுப்பி பலிமார் மடம், பீடாதிபதி வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஹிந்து தர்மார்த்த ஸமிதி நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம், விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருக்குடை ஊர்வலத்தை உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், திருக்குடைகள் ஊர்வலம், என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று மாலையில், திருக்குடைகள் கவுனி தாண்டின. வழிநெடுக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருக்குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டு தரிசித்தனர். வரும் 27ம் தேதி திருமலை திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.