சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் 800 ஆண்டு பழமையான நந்தவனம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களைக் கொண்டு சாமிக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி காணப்பட்டது. தற்போது இந்த நந்தவனம் மீட்டெடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மு.சி.அ.சேவுகப்பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பில் நந்தவனம் மராமத்து செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் மகாவில்வம், ருத்ராட்சம், நாகலிங்கம், செங்காலி, வன்னி போன்ற இறைவனுக்கு உகந்த மரங்களும், செண்பகம், பாரிஜாதம், பவளமல்லி, மந்தாரை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட வாசனை மலர்களும் என 240 கன்றுகள் நடப்பட்டது. இதற்கான விழாவில் திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி, பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர். முன்னதாக கோயிலில் இருந்து தெய்வீக மூலிகை செடிகள் பூக்கன்றுகளை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயந்தன் லட்சுமிபிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர். நந்தவனத்தை பராமரித்து பூக்களை கோயிலுக்கு வழங்கும் பொறுப்பை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது.