ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நவம்பர் 27ல் கும்பாபிஷேகம்
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் வரும் நவம்பர் 27ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனரமைப்பு பணி தொடங்கியது. தொடர்ந்து போதிய நிதி இல்லாததால் திருப்பணிகள் பாதியில் நின்றது. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோவிலில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். மீண்டும் திருப்பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கும்பாபிஷேகத்திற்கான தேதி நிர்ணயிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், சரக ஆய்வாளர் புருஷொத்தமன், செயல்அலுவலர் பாக்யராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகிகள் சிவமுருகன், செல்வகுமார், இதயதுல்லா, ஊராட்சி செயலாளர் ஜெயமுருகன், எழுத்தர் விமல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.