சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 19ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாள் (21ம் தேதி) இரவு மக்கள்மார் சந்திப்பு, மக்கள்மார் சுற்று, ஐந்தாம் நாள் (23ம் தேதி) காலை பஞ்சமூர்த்தி தரிசனம், சுவாமியையும் பெருமாளையும் அம்பாளையும் கருடன் வலம் வரும் அற்புத காட்சி, இரவு ரிஷப வாகன தரிசனம், 25ம் தேதி இரவு கைலாசபர்வ தரிசனம், 26ம் தேதி காலை சிதம்பரேஸ்வரர் வீதி உலா, அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜபெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் அஷ்டாபிஷேகம், மாலை நாம ஜெபம், சமய சொற்பொழிவு, இரவு பக்தி இன்னிசை, சிதம்பரேஸ்வரர் வீதி உலா ஆகியன நடந்தது.
தேரோட்டம் : ஒன்பதாம் நாள் விழாவான நேற்று (27ம் தேதி) காலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. குமரி மாவட்ட சப் கலெக்டர் சங்கர்லால் உமாபத், கன்னியாகுமரி எஸ்.பி., மணிவண்ணன், தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், டி.ஆர்.ஓ., பழனிச்சாமி, தேவசம்போர்டு கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ் மற்றும் பஞ்., உறுப்பினர்கள் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேரை சிறுவர் சிறுமியரும், சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். கீழரதவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரத வீதி வழியாக ஆடி அசைந்து வந்த தேர்கள் 10.45 மணிக்கு அதன் நிலைக்கு வந்தன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல், சமய சொற்பொழிவு, ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவருதல், இரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியன நடந்தது.
பாச போராட்டம்:திருவிழாவிற்காக சுசீந்திரம் வந்திருந்த மருங்கூர் மற்றும் வேளிமலை சுப்பிரமணியசுவாமி, கோட்டார் விநாயகர் ஆகியோர் தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும் உருக்கமான இந்த சப்தாவர்ணம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சிவன், பார்வதி வாகனம் கோயின் முன் இரவு 12.30 மணிக்கு தங்களது பிள்ளைகளான விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை பிரிய மனமில்லாமல் மூன்று முறை கோயிலுக்குள் செல்வதும் பின்னால் திரும்புவதுமாக நடந்த சப்தாவர்ண காட்சியில் மூன்றாவது முறையாக ஒரே வேகத்தில் கோயிலுக்குள் ஓடி செல்வது போன்ற நிகழ்ச்சியை பக்தர்கள் பார்த்து மெய் சிலிர்த்தனர்.ஆராட்டு : 10ம் நாள் விழாவான இன்று (28ம் தேதி) காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா, மாலை சமய சொற்பொழிவு, இரவு திரு ஆராட்டு ஆகியன நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் சுசீந்திரம் டவுன் பஞ்., சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.