வடமதுரையில் பூத்த பிரம்ம கமலம்; பூஜை செய்து மக்கள் சிறப்பு வழிபாடு
வடமதுரை; பிரம்ம கமலம் பூத்ததையடுத்து வடமதுரை அண்ணா நகர் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பிரம்ம கமலம் வருடம் ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்கக்கூடிய தாவரம். கள்ளி இன செடியான இதன் இலை வழியே வெண்ணிறம் கொண்ட மலரானது 3 விதமான இதழ்களை கொண்டு அழகாக இருக்கும். பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சுருங்கி, குவிந்துவிடும். இத்தாவரம் தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளை பிறப்பிடமாக கொண்டது. தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று கொண்டாடுகின்றனர். புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் பூமிக்கு பூவாக வருவதாக நம்பிக்கை. ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவில் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும், இயேசு பிறந்தபோது அவரைக் காண வந்த 3 அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இது பாரக்கப்படுகிறது. வடமதுரையில் அண்ணாநகர் புவனேஸ்வரி வீட்டில் வளரும் இத்தாவரத்தில் கடந்தாண்டு ஆடிப்பூரம் நாள் இரவில் பூ மலர்ந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணியளவில் பூ மலர்ந்தது. இதையடுத்து அப்பகுதியினர் பூஜை செய்து வழிபட்டனர். இதை வழிபட்டால் நினைத்த செயல் வெற்றியாகும் என அப்பகுதியினர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.