மயிலாடுதுறை மங்கைமடம் யோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை; மங்கைமடம் கிராமத்தில் இன்று நடந்த யோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மங்கைமடம் கிராமத்தில் யோகாம்பாள் சமேத யோகநாத சுவாமி கோவில் உள்ளது. திருவெண்காட்டில் சிவபெருமான் மருத்துவாசூர சம்காரத்திற்கு பிறகு மணிகர்ணிகை ஆற்றின் கரையில் யோகீஸ்வரம் என்று போற்றப்படும் இந்த தலத்தில் மேற்கு நோக்கி சுவாமி, அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்தி மூவரும் யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாதிக்கின்றனர். இங்கு வந்து சுவாமி, அம்பாள், தக்ஷிணாமூர்த்தியை தரிசிப்போருக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 31ஆம் தேதி யாகசாலை பிரவேசம் செய்யப்பட்டு இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. தொடர்ந்து பூர்ணாகஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து மங்கள மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சர்வ சாதகம் ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார் தலைமையிலானோர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அலுவலர்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவெண்காடு போலீசார் மற்றும் பூம்புகார் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை செயல் அலுவலர் கணேஷ்குமார் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.