பாலாலயம் முடிந்து 4 மாதமாகியும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி துவங்காத அவலம்
வாலாஜாபாத்; தம்மனுார், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்ய பாலாலயம் நடைபெற்று நான்கு மாதமாகியும் இதுவரை அடுத்த கட்டப் பணி துவங்கமால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், நிர்வாக சீர்கேடு காரணமாக, 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. இதனிடையே, கோவில் கட்டடம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கோவில் மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதையடுத்து, இக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, கோவில் திருப்பணி துவக்க, கடந்த ஜூலை மாதம் கோவிலில் பாலாலயம் மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர் முன்னிலையில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பாலாலயம் முடிந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை அடுத்த கட்டப் பணிகள் துவங்காமல் கோவில் திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கோவில் அறங்காவலர் குழு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தம்மனுார், ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருப்பணி செய்ய ஏற்கனவே கோரிய டெண்டர் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. ஒப்பந்த புள்ளிக்கான பதிவில் பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரி மற்றும் பணி மேற்கொள்ளும் 2 ஸ்தபதிகள் பெயர் பதிந்து சமீபத்தில் மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு சில தினங்களில் இக்கோவில் திருப்பணி துவங்கப்பட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.