சபரிமலையில் 4000 பேர் நிற்க வேண்டிய இடத்தில் 20,000 பேர்; நடை திறந்த 48 மணி நேரத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுக்க துவங்கினர். இதனால், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவம்பர் மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிசம்பர் 10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நடை திறக்கப்பட்ட, 48 மணி நேரத்தில், இரண்டு லட்சம் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத பக்தர்கள் வரும் நிலையில் பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லை. எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து, நிலக்கல்லிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கும் பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசும், தேவசம் போர்டும் பக்தர்கள் குறித்து கவலைப்படவில்லை.