சபரிமலை கியூ காம்ப்ளக்ஸில் அடிப்படை வசதி செய்ய உத்தரவு
சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் கூட்டம் அதிகமாகும் போது இங்கு தங்கும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அவற்றை செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பை முதல் சன்னிதானம் வரையிலான ஐந்து கிலோமீட்டர் துாரப்பாதையில் மரக் கூட்டம், சரங்குத்தி, சன்னிதானம் ஆகிய இடங்களில் 23 கியூ காம்ப்ளக்ஸ் உள்ளன. ஆனால் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் , தேவையான எண்ணிக்கையில் மின் விளக்குகள் இல்லை. கழிவறைகள், தண்ணீர் பைப்புகள் உடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் குடிநீர் இல்லை. கொதிக்க வைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதாக கூறினாலும் பற்றாக்குறை உள்ளது.
கியூ காம்ப்ளக்சை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளது. பல இடங்களில் இருந்தும் இடிக்கப்பட்ட கட்டட கழிவுகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு சுகாதாரமான கழிவறை, குடிநீர் மற்றும் உணவு வசதி செய்தால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கும் போது இங்கு தங்கி இளைப்பாற வாய்ப்பு உள்ளது.
நடைதிறந்த முதல் இரண்டு நாட்கள் பக்தர்கள் நீண்ட நேரம் கியூவில் நின்று சிரமப்பட்டதால் பலரும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சபரிமலை அரசு பணிகளை ஒருங்கிணைக்கும் ஆர்.டி.ஓ. அருண் எஸ் நாயர் கியூ காம்ப்ளக்ஸ்களை பார்வையிட்டு அவற்றை சுத்தம் செய்து பக்தர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்ய உத்தரவிட்டார்.