சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
தொண்டாமுத்தூரில் உள்ள சித்தி விநாயகர் கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை, மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதல், தீர்த்தகுடங்கள் வழிபாடு நடந்தது. அதன்பின், மாலை, முதல் கால வேள்வி நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நடந்தது. தொடர்ச்சியாக, காலை, 8:50 மணிக்கு, வேள்விசாலை மண்டபத்தில் இருந்து, கலசகுடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 9:05 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் தலைமையில், விமான கலசங்கள், சித்திவிநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.